ஈரோடு: ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துகொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் 52. கட்டிட தொழிலாளியான இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த வெங்கநாயக்கன் பாளையம் காலனில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை அவரது மகள் வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த கட்டிடத்தில் செல்வம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது தலையில் கல்லால் பலமாகத் தாக்கி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்துக்குரிய விதமாக வந்த நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பொண்ணுகுட்டி என்கிற பண்ணாரி 42. என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் செல்வத்தை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கட்டிட தொழிலாளி செல்வத்துக்கு, உடன் பணிபுரியும் நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
ஆயினும், அந்த பெண்ணிற்கு கட்டிட தொழிலாளி ஆன பொண்ணுகுட்டியுனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர், செல்வத்துடனான தொடர்பை கைவிடும்படி, அந்த பெண்ணிடம் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் அருகேயுள்ள கட்டிடத்தில் செல்வம், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை கண்ட பொண்ணுக்குட்டி, ஆத்திரத்தில் கீழே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து செல்வத்தின் தலையில் தாக்கியதில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, பொண்ணுகுட்டியை கைதுசெய்த போலீசார், செல்வத்துடன் தொடர்பில் இருந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :