சென்னை: சென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த தனியார் பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பள்ளிக் கட்டணத்தை செலுத்தினார்.
சென்னை வேப்பேரி பகுதியில் செயல்பட்டு வரும் பெயின்ஸ் மெமோரியல் பேப்டிஸ்ட் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளியில், 10 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 16 பேர் முதல் பருவ கல்விக் கட்டணத்தை செலுத்தாததால், காலாண்டு தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த தகவல் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனை எட்டவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவைச் சேர்ந்த போலீசார், பள்ளி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டதன் பேரில் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பிரிவின் ஆணையர் ஜெயலஷ்மியின் வேண்டுகோளுக்கிணங்க, ஃபிக்கி ப்ளோ எனும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் காவல் ஆணையர் முன்னிலையில் மாணவர்களின் கல்விக் கட்டணம் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை பள்ளி முதல்வரிடம் வழங்கினர்.
இதே போல் நேசக்கரம் எனும் தனியார் அமைப்பின் சார்பில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் ஆணையாளர் ஜெயலஷ்மி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விளக்கிப் பேசினார்.