தூத்துக்குடி: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று (16.02.2022) கல்லூரி பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், சைபர் குற்றங்களை தடுக்கவும், அதனை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவும் சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும், சமூக வலைதளங்களில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இதில் பணத்தை இழந்து அதிக பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதே போன்று சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். குறுஞ்செய்திகளில் வரும் லிங்க்குகளை பயன்படுத்தினால் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். சமூக வலைதளங்களில உங்கள் விவரங்களை பதிவு செய்யும்போது அதற்காக கடவுசொற்களை எளிமையான முறையில்லாமல் இல்லாமல் யாரும் கண்டுபிடிக்காத வகையில் உருவாக்கி அதை பயன்படுத்தி பதிவு செய்யுங்கள். சைபர் குற்றங்களுக்கென்றே தனியான சட்டங்கள் உள்ளது. அதை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை பெற்று தர வழிவகை உள்ளது.
பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்களது ஏ.டி.எம் கார்டு எண்களை கேட்டு வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கூறி சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் திரு.நாகராஜன், பேராசிரியர்கள் முனைவர் திருமதி.சுபாஷினி மற்றும் முனைவர் திருமதி.ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஏ.பி.சி கல்லூரி துணை பேராசிரியை முனவைர் திருமதி.சுப்பபுலெட்சுமி, விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என் கல்லூரி துணை பேராசிரியர் முனைவர் திரு.சாமி, தூத்துக்குடி திரு.அருள்ராஜ் மருத்துவமனை சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் திரு.ஆரத்தி கண்ணன், இயக்குநர் முனைவர் திரு.அருணாசலராஜன், முனைவர் திருமதி.பூங்கொடி, கல்லூரி செயலாளர் திரு.சோமசுந்தரம், பொருளாளர் திரு.முத்துச் செல்வம், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் திரு.முத்துகணேஷ் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.