சிவகங்கை: காரைக்குடி அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025 ஆண்டு புதிதாக சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தேசிய அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் , தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறையின் ஆசிரியர் மனசு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. சிகரம் சதீஷ் குமார் அவர்களும் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தனர். ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் S.சுப்பையா அவர்கள் தலைமை உரையாற்றி விழாவை துவங்கி வைத்தார் .
அவர் பேசுகையில் இந்த கல்வி ஆண்டு முதல் இராஜ ராஜன் பொறியியல் கல்லூரி யூஜிசியால் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளதாக மாணவர்களிடம் கூறினார். மேலும் இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் மாறி வருகிற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு வேலைக்கு தகுதியுள்ளவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று கூறினார்.கல்லூரியின் டீன் முனைவர் M.சிவகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் .நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திரு. சிகரம் சதீஷ் குமார் அவர்கள் தனது கல்லூரி நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு சாதனை படைக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர் கவிஞர் தங்கமூர்த்தி அவர்கள் கடலுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியாது ஆனால் ஆழ்கடலுக்கு சென்று மூச்சு அடக்கி முத்து குளிப்பவர்கள் மட்டுமே விலை மதிப்புள்ள முத்துகளை எடுப்பார்கள். அதுபோலவே மாணவர்களும் கல்வியின் பயன் அறிந்து கற்று வாழ்வில் முன்னேற்ற நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் மகாலிங்சுரேஷ் அவர்கள் மாணவர்களை வரவேற்று கல்லூரியில் துறை தலைவர்களையும், பேராசிரியர்களையும் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். புதுக்கோட்டை மன்னர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் C. அய்யாவு அவர்கள் மற்றும் புதுக்கோட்டை பாவேந்தர் பள்ளியின் தாளாளர் காசிநாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் முனைவர் மீனா தேவி அவர்கள் நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்து வைத்தார். இந்த நிகழ்வில் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை பேராசிரியர் திருமதி சத்யா மற்றும் பிரியா மேலும் முதலாம் ஆண்டு துறை பேராசிரியர்கள் அனைவரும் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி