சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பத்ம
ஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ் பங்கு பெற்றார். சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி முனைவர் செல்வசுரபி அவர்கள் அரசின் திட்ட உரையாற்றினார். தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களுக்கு தமிழின் பெருமையையும் பாரம்பரியத்தையும் கொண்டு செல்ல இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பத்ம ஶ்ரீ நர்த்தகி நடராஜ் “நம் தமிழ், நம் பெருமை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். வாழ்வில் தனது கடினமான காலக்கட்டத்தில் தனக்கு துணையாக இருந்தது தன் தோழி சக்தி பாஸ்கரும், தமிழும் தான் என்று கூறினார். வாழ்க்கையில் பல தடைகளை கடந்து தான் சாதித்ததுப் போல மாணவர்களும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற கூறினார். இன்றைய மாணவர்கள் தான் நாளைய தமிழ்நாட்டின் பேரரசர்கள் என்றும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார் .கல்லூரியின் தலைவர் சுப்பையா அவர்கள் உரையில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்காத நாடு தான் முன்னேற்றம் அடையும் என்று கூறினார். நிறைவாக விழாவில் சிறப்பாக பங்குப் பெற்று கேள்வி கேட்ட மாணவர்களுக்கு “பெருமிதச் செல்வன்”, “பெருமிதச்செல்வி” என்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரின் முதல்வர் அந்தோணி டேவிட் , தமிழ் துறை தலைவரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இராமமூர்த்தி, இராஜ ராஜன் கல்லூரி டீன் சிவக்குமார், துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















