சேலம் : சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லு கடை என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை எண் 7415 செயல்பட்டு வருகிறது. அத்துடன் மதுபான பார் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. சேகர் வயது (35) த/பெ. துரைசாமி, கள்ள பாளையம் என்பவர் மேற்படி பாரில் ஆறு மாதம் முன்பு வேலை செய்து வந்துள்ளார். அவர் எந்நேரமும் குடிபோதையில் இருந்ததால் அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இருப்பினும் மேற்படி சேகர் மேற்படி டாஸ்மாக் கடை அருகிலேயே இருந்து கொண்டு அங்கு மது அருந்துபவர்களுக்கு சிறு உதவிகள் செய்தும், தெரிந்தவர்கள் வரும்போது அவர்களிடம் மது வாங்கி கொடுக்கச் சொல்லி அருந்தியும் அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பார். வீட்டிற்கும் செல்லாமல் சரியாக சாப்பிடாமலும் இருந்ததால் கடந்த (20.05.2023) அன்று மேற்படி டாஸ்மாக் கடை அருகிலேயே மயங்கிய நிலையில் இருந்தவரை அவரது உறவினர்கள் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். குடிப்பதால் குடல் கெட்டுப்போய் ரத்த வாந்தி வருவதாகவும் குடியை உடனடியாக நிறுத்தாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று எச்சரித்து அவருக்கு வயிற்று சிகிச்சைக்கான மருந்துகளை கொடுத்துள்ளார். இருப்பினும் மருத்துவர் அறிவுரையை கேட்காமல் தொடர்ந்து குடித்து வந்த நிலையில் இன்று மாலை மேற்படி டாஸ்மாக் கடை அருகிலேயே சேகர் இறந்துள்ளார்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்