கல்லீரல் ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
உடலின் ரசாயன நிறுவனம் என்றால் அது கல்லீரல்தான். உடலில் உள்ள ரசாயனங்களை அடையாளம் கண்டு அதைக் கண்டெடுத்து, தேக்கி வைத்து அழிப்பதில் கல்லீரலின் பங்கு பெரியது. அப்படிப்பட்ட கல்லீரலை பலமாக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?
உடலில் உள்ள இரண்டாவது பெரிய உள்ளுறுப்பு கல்லீரல். ஒரு கெமிக்கல் ஃபேக்டரி போல உடலில் சேரும் கெமிக்கல்களை நீக்கி நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்லீரலுக்கானது. நம்மை கெமிக்கல்கள், நச்சுக்களில் இருந்து காக்கும் கல்லீரலைப் பாதுகாப்பது நமது பொறுப்புதான். அவ்வகையில் கல்லீரலை பலமாக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா…
மீன்கள் : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன்களைச் சாப்பிடுவது நல்லது. இதய நோய்கள் வராமல் தடுக்கும். கல்லீரல் நோயாளிகள் மீன்களைச் சாப்பிடுவதால் பலனுண்டு. குடியால் பாதித்த கல்லீரல், குடியை விட்ட பிறகு சீராக ஓமேகா 3 சத்துகள் தேவை. இவை மீன்களில் உள்ளன.
கொத்தமல்லி : உடலில் உள்ள டாக்ஸிக் அதாவது நச்சுகளை நீக்குவதில் சிறப்பானது கொத்தமல்லி கீரை. கொத்தமல்லி 2 கைப்பிடி ஒரு சிட்டிகை இந்துப்பு, அரை எலுமிச்சை சாறு பிழிந்து ஜூஸாக்கி குடித்து வர கல்லீரலின் நச்சுக்கள் நீங்க உதவியாக இருக்கும். கல்லீரல் பலமாகும்.
திராட்சையும் பழங்களும் : திராட்சையிலும் மற்ற பழங்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் கல்லீரலைப் பாதுகாக்கும். நாரிஜெனின், நாரிங்கின் எனும் சத்துகள் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்கும். கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும். கல்லீரலில் ஏற்படும் நார்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும். அதிகக் கொழுப்பு சேருவதைத் தடுக்க பழச்சத்துகள் உதவும். திராட்சை மிக முக்கியம் மற்ற பழங்களும் கல்லீரலை பாதுகாக்கும் காவலனே.
உயிர்கொல்லி நோய்கள்கூட வராமல் தடுக்கும் பூண்டு
செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் : நல்ல கொழுப்பு உள்ள எண்ணெய், செக்கில் எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் ஆகியவை. இவற்றால் தினமும் சமையல் செய்து சாப்பிட எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், இந்த எண்ணெயும் கூட மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தியதையோ எண்ணெயில் பொரித்தவற்றையோ சாப்பிடக் கூடாது. தினசரி சமையலுக்கு இவ்வகை எண்ணெய் போதும். இவை கல்லீரலுக்கு நல்லது. குறிப்பாகத் தேங்காய் எண்ணெய்.
கரும்பு ஜூஸ் : உடலின் ரசாயன நிறுவனம் என்றால் அது கல்லீரல்தான். உடலில் உள்ள ரசாயனங்களை அடையாளம் கண்டு அதைக் கண்டெடுத்து, தேக்கி வைத்து அழிப்பதில் கல்லீரலின் பங்கு பெரியது. நச்சுக்களை நீக்கும் கல்லீரலுக்குப் பெரிதாக உதவுவது கரும்பு ஜூஸ். வாரம் ஓரிருமுறை கரும்பு ஜூஸ் குடித்திட கல்லீரல் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரலை பலப்படுத்தும்.
இளநீர் : இளநீர் ஒரு ஆல் ரவுண்டர். தாய்ப்பாலுக்கு இணையான சத்துகள் இருப்பது இளநீரிலே. நச்சு நீக்கியாகவும் உடலின் நீர்த்தன்மை சமன்படுத்தவும் உதவும். உடலுக்கு ஆல்கலைனாகவும் இருக்கும் இந்த இளநீர். வாரம் ஓரிரு முறை இளநீர் பருகிட கல்லீரல் சீராகச் செயல்பட உதவும்.
கீழாநெல்லி மோர் : மஞ்சள் காமாலையை விரட்டுவதில் கீழாநெல்லிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. கீழாநெல்லியை ஒரு நெல்லி அளவுக்கு அரைத்து உருண்டையாக்கி அதை மோரில் கலந்து குடித்திட கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை தொந்தரவுகள் நீங்கும். மோர் என்பது வெண்ணெய் நீக்கப்பட்ட தயிர்தான். மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி தயிரை அரைப்பது மோர் அல்ல. அதற்குப் பெயர் தண்ணி தயிர். வெண்ணெய் நீக்கப்பட்ட மோருடன் கீழாநெல்லியை அரைத்து குடிப்பதே பலன்.
நட்ஸ் : வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி, நிலக்கடலை போன்ற நட்ஸ் தலா 5 எனச் சாப்பிடுவது ஆரோக்கியமான மீல் எனலாம். காலை உணவாகப் பசி வந்த பிறகு சாப்பிடுவது, உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். இதில் உள்ள ஃபோலிக், ஒமேகா அமிலங்கள் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். கல்லீரலை பலமாக்கும்.