புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 185 போலீசாருக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பயிற்சி மைய முதல்வரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான வந்திதா பாண்டே வரவேற்று பேசினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் ஐ.ஜி. திருமதி.செந்தில்குமாரி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார். பயிற்சியில் சிறந்த 3 போலீசாருக்கு பதக்கங்களையும், சான்றிதழையும் அவர் வழங்கினார். விழாவில் ஐ.ஜி. செந்தில்குமாரி பேசியதாவது:- காவல்துறை பணி என்பது கடினமான, சவாலான பணி. போலீஸ் பணிக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். உரிய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போலீசாக பணியாற்ற உள்ளனர்.
தமிழகத்தில் போலீஸ் துறையில் பல பணிகள் இருந்தாலும் காவலர் பதவி என்பது மிக முக்கியமானது. மக்களோடு, மக்களாக உறவாடி, மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு, பொதுமக்களின் அமைதியான வாழ்வுக்கு பாதுகாப்பு அளித்து, குற்றமில்லாத சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொரு போலீஸ்காரரின் கடமையாகும். ஒவ்வொரு இளம் காவலரும் இதனை மனதில் பதிய வைத்து ஆற்றலோடும், துணிவோடும் பணியாற்ற வேண்டும். காவல்துறை மக்களின் நண்பன் என்பதை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும். காவல்துறை மக்களின் நன்மதிப்பை பெற கடின உழைப்பு, தன்னலமற்ற சேவை, தியாக உணர்வு, ஊக்கத்தோடு பணியாற்றுவீர்கள் என நம்புகிறேன்
இங்கு பயிற்சி பெற்ற காவலர்களில் 58 பேர் என்ஜினீயர்கள், 77 பேர் பட்டதாரிகள், 17 பேர் முதுநிலை பட்டதாரிகள் ஆவார்கள். இந்த 7 மாத பயிற்சியானது மனம், உடல் திறன் காவல்துறைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பயிற்சி முடித்த போலீசாரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகா, மல்யுத்தம், கராத்தே ஆகிய சாகசங்கள் நடைபெற்றது. இந்த சாகசங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்ய தொடங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. கொட்டும் மழையில் கராத்தே சாகசங்களை மட்டும் செய்தனர். அதன்பின் நடைபெற இருந்த சாகசங்கள் ரத்து செய்யப்பட்டன. விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமதி.கீதா, பயிற்சி மைய துணை முதல்வர் திரு.முருகராஜ், முதன்மை சட்டப்போதகர் திரு.ரஷ்யா சுரேஷ், முதன்மை கவாத்து போதகர் திரு.கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த காவலர்களின் பெற்றோர், குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.