தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும் ஓசூர் பெஸ்தி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுராம் மகன் வெங்கடேஷ் பாபு (45) ஆகியோர் கடந்த சில நாட்களாக தங்களிடம் கருப்பு வைரம் இருப்பதாகவும், அவசரத் தேவைக்கு வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ரூபாய் 27,00,000/- (இருபத்து ஏழு லட்சம்) பணம் கேட்டு தூத்துக்குடியில் உள்ள சில நகை வியாபாரிகள் மற்றும் தனி நபர்களிடம் கேட்டு மோசடி செய்ய முயன்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார், முதல் நிலைக் காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், காவலர்கள் திரு. செந்தில், திரு. ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி அனந்தா மற்றும் வெங்கடேஷ் பாபு ஆகியோரை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 425 கேரட் எடையுள்ள கருப்பு வைரம் எனப்படுவதையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தென்பாகம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். பின் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்தும், கைப்பற்றப்பட்ட கருப்பு வைரத்தின் தன்மையை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யுமாறு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து மோசடி வேலையில் ஈடுபடவிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.