தூத்துக்குடி : கோவில்பட்டியில் கம்பன் கழக முதலாம் ஆண்டு விழா சனிக்கிழமை மாலை தமிழிசையுடன் தொடங்கியது. தொடர்ந்து மருத்துவர் கோமதி, மதுரை கம்பன் கழகத் தலைவர் சங்கரசீத்தாராமன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன், இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முனைவர் அமிர்தவர்ஷினி, தொழிலதிபர் ஹரிபாலகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பின்னர் மதுரை கம்பன் கழகத் தலைவர் விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். இரவு 7 மணிக்கு எழிலுரை எனும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கம்பன் எனும் கடல் என்ற தலைப்பில் கு.ஞானசம்பந்தன் பேசினார். 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மருத்துவர்கள் கோமதி, ராஜேந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 1330 திருக்குறளையும் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் சொல்லும் என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான வேணி, கனகவள்ளி, வீரச்செல்வி, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி, வேலுநாச்சியார், எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த ஹரிபிரசாத், 3 ஆயிரம் பழந்தமிழ் பாடல் வரிகளை கூறும் 2ஆம் வகுப்பு மாணவர் நளன்ஸ்ரீ, 3ஆம் வகுப்பு மாணவர் கிஷன்ஸ்ரீ மற்றும் திருக்குறளை மனப்பாடமாக கூறும் அளவிற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களான ராஜசேகர், ஜான்சிராணி ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
காலை 10 மணிக்கு இராமபிரானின் முப்பரிமாணம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேராசிரியர் ராமச்சந்திரன், தனயன் என்ற தலைப்பில் முனைவர் க.முருகேசன், தமையன் என்ற தலைப்பில் கு.பாஸ்கர், தலைவன் என்ற தலைப்பில் முனைவர் ம.கண்ணன் ஆகியோர் பேசினர். மாலை 5 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் பஜனை நடைபெற்றது. தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் கம்பனை கற்போர் உள்ளத்தைப் பெரிதும் கவரும் தம்பி என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.இலக்குவனே என்ற தலைப்பில் ரெ.ராஜ்குமார், க.கருணாநிதி, முனைவர் குரு ஞானாம்பிகா, கும்பகர்ணனே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, சரவணச்செல்வன், இந்திரா ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் பழனியப்பன், மீனாட்சிசுந்தரம், சிதம்பரம், தொழிலதிபர்கள் பரமசிவம், அபிராமி பொ.முருகன், வி.எஸ்.பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கம்பன் கழக நிறுவனர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வெ.மு.லட்சுமணப்பெருமாள், துணைத் தலைவர்கள் மருத்துவர் சிதம்பரம், ராஜாமணி ஆகியோர் தலைமையில் செயலர் சரவணச்செல்வன், பொருளாளர் வினோத்கண்ணன், இணைச் செயலர் மதிவாணன், ஒருங்கிணைப்பாளர் சுனையரசன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.