தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சுப்பையா 50. என்பவர் குடும்ப தேவைக்காக மேல சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூபாய் 20,000/- (இருபதாயிரம்) கடன் வாங்கியுள்ளார்.
மேற்படி கடன் ரூபாய் 20,000/-க்கு வட்டியாக மாதம் ரூபாய் 2,000/- (இரண்டாயிரம்) பணம் கட்ட வேண்டும் என்று சக்திவேல் கூறியதன் அடிப்படையில் முதல் மாதம் ரூபாய் 2,000/- கட்டியுள்ளார்.
இந்நிலையில் சுப்பையாவிற்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலை இல்லாமல் போகவே கடந்த 3 மாதங்களாக வாங்கிய கடனிற்கு வட்டி கட்ட முடியவில்லை, மேலும் சக்திவேலுவிடம் வட்டியை குறைக்குமாறு கூறியதற்கு, குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் 12.09.2021 அன்று மாலை மேற்படி சுப்பையா சாத்தான்குளம் விரிப்பொட்டார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சாத்தான்குளம் விரிபொட்டார் தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் அந்தோணி சதீஷ் 46. என்பவர் மேற்படி சுப்பையாவை வழிமறித்து, தான் மேற்படி சக்திவேல் என்பவரிடம் வேலை பார்ப்பதாக கூறி, சுப்பையாவை ஏன் 3 மாதமாக வட்டி கட்டவில்லை என்று கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து சுப்பையா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணன் அவர்களுக்கு எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணன் மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சாத்தான்குளம் விரிபொட்டார் தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் அந்தோணி சதீஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.