திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் ஆயுதங்களை கொண்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி கடந்த (22.02.2024)-ந்தேதி, உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூர் ஹைரோடு ஆர்.ஆர் ஹோட்டல் அருகில் தனது நண்பருடன் நடந்து சென்ற தரைக்கடை பழ வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்த சரவணன் வயது (48). த.பெ.அழகிரி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் குற்றவாளி சரவணன் மீது உறையூர் காவல்நிலையத்தில் கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. எனவே குற்றவாளி சரவணன் என்பவர் மதுபோதையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என்றும் அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.