விருதுநகர்: காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உத்தரவின் பேரில், மாவட்ட எல்லை பகுதிகளில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள்
நடைபெற்று வருகிறது. இன்று ராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில், நிலஅபகரிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராஜா மற்றும் ஆறு ஆய்வாளர்கள், நகரில் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் காமிரா மூலம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி மைதானங்கள், விளையாட்டு திடல்களில் திரண்டிருந்த சிறுவர்கள், இளைஞர்களை போலீசார் எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் கூறும்போது, முழு ஊரடங்கின் போது முறையான அனுமதி பெறாமல் சுற்றித்திரிந்த 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை கடைப்பிடிக்காமல் இருந்ததற்காக ஆயிரத்து 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒவ்வொரு பகுதியிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுற்றித்திரிபவர்கள் மீது, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
.