சென்னை: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த செல்வம், 42. என்பவர் 02.9.2021 அன்று உடல்நிலை குன்றி மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், 06.09.2021 அன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செல்வத்தின் உறவினர் வீரபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
F-5 சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் விசாரணை செய்ததில், செல்வம் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்ததும், இதனால் செல்வம் உடல்நலம் குன்றி உயிரிழந்ததும் தெரியவந்தது.
மேலும் செல்வத்தின் மனைவி விஜயலஷ்மி, மோகன் (எ) முண்டக்கண்ணு மோகன் என்பவருடன் கொண்ட கள்ளக்காதல் காரணமாக செல்வத்திற்கு சாப்பாட்டில் விஷம் வைத்தது தெரியவந்தது.
அதன்பேரில், சந்தேக மரணம் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கை கொலை உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம் செய்து, உணவில் விஷம் வைத்து செல்வத்தை கொலை செய்த அவரது மனைவி விஜயலஷ்மி, 38, சூளைமேடு மற்றும் இவரது
கள்ளக்காதலன் மோகன் (எ) முண்டக்கண்ணு மோகன், 54, நெற்குன்றம், ஆகியோரை கைது செய்தனர். மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
