கோவை :கோவையை அடுத்த கோவில் பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35). இவரது மனைவி ராம்பிரபா(27). இவர் வெள்ளானைப்பட்டியலில் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு அஸ்மிதா (5), முகின் (2), ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு அன்னூர்-சிறுமுகை ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதற்காக பிரகாஷ் தனது மோட்டார்சைக்கிளில் குடும்பத்தோடு புறப்பட்டார். மோட்டார் சைக்களின் பின்னால் அவரது மனைவி ராம்பிரபா இருந்தார். அவர் தனது மகள் அஸ்மிதாவை கையில் வைத்திருந்தார்.
மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங் பகுதியில் மகன் முகின் இருந்தார். கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு வீடுக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் சிறுமுகை ரோடு வழியாக அன்னூர் புழுவம்பாளையம் குளம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக ஒரு நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரகாஷ் உள்பட 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் மனைவி ராம் பிரபாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கினார். அஸ்மிதா, முகின் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிரகாஷ் காயமின்றி தப்பினார்.
இந்த நிலையில் கீழே விழுந்து தவித்த 3 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ளஅன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராம்பிரபா வழியிலேயே இறந்துவிட்டார். அஸ்மிதா, முகின் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
தனது கண்முன்னே மனைவி இறந்ததை பார்த்த பிரகாஷ் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்