தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பகுதியில் டான்போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயணம் என்ற நிகழ்ச்சி (25.09.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் , அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், இந்த விழிப்புணரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்த டான்போஸ்கோ இளையோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் தற்போது பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை அழித்து கொண்டிருக்கின்றனர்.
போதைக்கு தொடர்ந்து அடிமையாகும் இளைஞர்கள் ஆண்மை அற்றவர்களாகிவிடுவார்கள். இதனால் இளைஞர்களின் உடல் நலம், மன நலம், கல்வி நலம், பொருளாதார நலம் ஆகியவைகள் கெட்டுபோகின்றது. ஆகவே இளைஞர்களாகிய நீங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு முழு ஓத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கூறி போதை பழக்கத்தை கைவிட்டு கல்வி, விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சமுதாயத்தில் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குமரேசன், உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.