மதுரை : மதுரை தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுதெருவை சேர்ந்த காசிராஜன் என்பரது மகளாகிய தாரணி என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற நிலையில் கடந்த 5மாதங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள பேஷன்டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்காக விண்ணப்பித்த நிலையில் கல்விகட்டணம் 2லட்சத்தை தாண்டும் என கூறி வீட்டில் பணம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பணம் இல்லை என கூறியதை கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துகூறிய நிலையில் கல்லூரி நிர்வாகமே கல்விகடனை ஏற்பாடு செய்து தருவதாக கூறி தொடர்பு எண்ணை மாணவியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிதிநிறுவனத்தை தொடர்புகொண்ட மாணவியிடம் நிதிநிறுவனத்தின் சார்பில் ஆவணக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் என கூறி 1லட்சம் ரூபாய்க்கு மேலாக ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் 23ஆயிரம் கடைசியாக செலுத்தினால் முழுத்தொகையையும் செலுத்துவதாக நிதிநிறுவனத்தினர் கூறியதாக தனது தாயிடம் இருந்து 23ஆயிரம் ரூபாயை பெற்று அதனை அனுப்பியுள்ளார். இந்நிலையில் தாய் கடைக்கு சென்ற நிலையில் மாணவி தாரணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தாரணியின் குடும்பத்தினர் தெப்பக்குளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் மணாவியின் செல்போனை கைப்பற்றிய நிலையில் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து,
மாணவி யாருக்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார் கடைசியாக யாருடன் பேசியுள்ளார் என்பது குறித்து, தகவல்தொழில்நுட்ப பிரிவு காவல்துறையினர் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.
கல்விக்கடனுக்கு வங்கியில் விண்ணப்பித்த நிலையில் மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் என மோசடி காரணமா? வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மாணவி கல்விகடன் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி