கடலூர் : புதுவை மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக சாராய பக்கெட்டுகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் மதுவிலக்கு ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான காவல்துறையினர், இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வரும் சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்றும் அதனைத் தொடர்ந்து பொலீரோ வாகனம் ஒன்றும் வேகமாக வந்தது. காவல்துறையினர், நிறுத்திய போது இந்த வாகனங்கள் நிற்கவில்லை இதனால் உஷார் அடைந்த காவல்துறையினர், இரண்டு வாகனங்களையும் 10 கிலோமீட்டர், தொலைவிற்கு விரட்டிச் சென்றனர்.
அப்போது காரைக்காடு என்ற பகுதியில் இரண்டு வாகனங்களை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்தவர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர், வாகனத்தை சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக சாராயப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதன் பிறகு பிக்கப் வாகனம் மூலம் இந்த இரண்டு வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து உள்ளே இருந்த 2000 க்கும் மேற்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை கைப்பற்றி இதனை கடத்தி வந்தவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடலூர் பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த ஐந்து பேர் இதில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை காவல்துறையினர், தீவிரமாக தேடி வருகின்றனர்.