தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழசண்முகபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஆறுமுகநேரி கீழசண்முகபுரம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சஞ்சய்குமார் 19, திருச்செந்தூர் என்.முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முத்துராமன் 21. மற்றும் ஆறுமுகநேரியை சேர்ந்த முருகன் மகன் ஹரிஷ் கிருஷ்ணன் 20. என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான சஞ்சய்குமார், முத்துராமன் மற்றும் ஹரிஷ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 110 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.