தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முனியசாமி, மற்றும் போலீசார் நேற்று (28.11.2022), ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவரது மனைவி பாத்திமா (எ) லைலா (47), மற்றும் அவரது மகன் யாசர் அராபத் (26) ஆகிய 2 பேர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான பாத்திமா (எ) லைலா மற்றும் அவரது மகன் யாசர் அராபத் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த (45) கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி பாத்திமா (எ) லைலா மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 12 கஞ்சா வழக்குகளும், குற்றவாளி யாசர் அராபத் மீது கஞ்சா உட்பட 10 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.