ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A.சுந்தரா அவர்களின் உத்தரவின்படி தீவிர போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, (15.12.2025) அன்று ஈரோடு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. விசாரணையில், கஞ்சா வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வந்து, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்யவும், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முழுமையாக முறியடிக்கவும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
















