தேனி: தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகார்க்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா,இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதல் படியும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில், ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடும்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் 5 கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் புலன் விசாரணை செய்ததில் ஆந்திரா பிரதேசம் மாநிலத்தில் கஞ்சா வாங்கி வருவதாக சொன்ன தகவல் அடிப்படையில், கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கடமலைக்குண்டு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சரவணன், மற்றும் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.ஜோதி பாபு, ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படை அமைத்தார்.
ஆந்திரா பிரதேச மாநிலத்திற்கு விரைந்து சென்ற தனிப்படையினர் கஞ்சா கடத்தல் வழக்கில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் சரவணன் மற்றும் சரண் என்ற இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய எடை மெஷின்,பேக்கிங் டேப் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை ஈடுபடும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை தொடரும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.