சென்னை: தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியே பெரிய அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர். அதில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3கோடி ரூபாய் மதிப்பிலான 590 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6பேரை பிடித்து சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த ராமநாதன் (35). அலெக்ஸ் பாண்டி (28). ஷேக் அப்துல்லா கமருதீன் (31). தஞ்சையை சேர்ந்த வினோத் பூசலிங்கம் 36, கோவையை சேர்ந்த பாரதி (31). மணிகண்டன் (35). என தெரிய வந்தது. இவர்கள் 6 பேரும் சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெரிய கும்பலின் ஒரு பகுதியாக இருப்பது தெரியவந்துள்ளது எனவும் கடத்தல் கும்பலின் மற்ற நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் MANAS- டோல் ஃப்ரீ எண்-1933 ஐ அழைப்பதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு