தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி எஸ்.ஐக்கள் ராஜ பிரபு, ரவிக்குமார், அரிக்கண்ணன் மற்றும் அல்லி அரசன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் அடங்கிய தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் தீவர ரோந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தாளமுத்துநகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த டேவிஸ்புரம் மாதவன் நாயர் காலணியைச் சேர்ந்த முருகேசன் மகன் யோகநாத் (26) மற்றும் மட்டக்கடை வடக்குப் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் மாரி விஜயகுமார் (24) ஆகியோரை 17.07.2020 அன்று விசாரணை செய்ததில் அவர்கள் இருவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
அதேபோன்று நேற்று (18.07.2020) சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமாந்தை மந்திக்கூத்து அய்யனார் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மேலமாந்தை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் முனியசாமி (31) என்பரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் நேற்று (18.07.2020) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலோன் காலணி நகராட்சி கழிப்பறை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மில்லர்புரம், சின்னமணி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் யோகப்பிரகாஷ் (23) என்பவரை விசாரணை செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவரையும் கைது செய்தனர். இதற்கு பயன்படுத்திய மாருதி ஸ்விப்ட் கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, கார் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.