சென்னை: சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு உதவி கமிஷனர் திரு.அழகேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.வேலு உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிறுவன் சாலையோரம் விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தான்.
போலீசார், அவனை எழுப்ப முயன்றபோது, போதையில் மயங்கி கிடப்பது தெரிந்தது. அவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இவனது தந்தை சற்று மனநலம் பாதித்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது தாயார் தஞ்சாவூரில் வேலை செய்து வருகிறார்.
இதனால், பாட்டி வீட்டில் வசித்து வரும் சிறுவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், தவறான நண்பர்களுடன் பழகி, கஞ்சா போதைக்கு அடிமையானது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவனை நந்தம்பக்கத்தில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அதற்கான செலவையும், அவனது படிப்புக்கான செலவையும் புளியந்தோப்பு போலீசார் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.