கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில், MBBS படிக்காமல் ஒருவர் மக்களுக்கு அலோபதி சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரிக்க கலெக்டர், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார். நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அன்பரசு, ஓசூர் சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜீவ் காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், இருதுக்கோட்டை கிராமத்தில் செயல்பட்ட போலி டாக்டரின் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவக்குழு ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு மருந்துக்கடை அருகே, தனி அறையில் ஒன்னுக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணன் (50), நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். கையும் களவுமாக அவரை பிடித்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு, முறையான அலோபதி மருத்துவ கல்வி பயிலாமல் மக்களை ஏமாற்றி, சிகிச்சையளித்து வந்தது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அவர் மீது தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
போலி டாக்டர் அஸ்வத் நாராயணன். அஸ்வத் நாராயணனை போலீஸார் கைது செய்து, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் – section 336 of IPC (45 of 1860), முறையான தகுதியின்றி சிகிச்சையளித்தல் – section 15 of IMC Act 1956 உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர். அவரின் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். அவர் கைதானதைத் தொடர்ந்து, அவரிடம் சிகிச்சை பெற்ற மக்கள் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த போலி டாக்டர் ஒன்றரை ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்தும், சுகாதாரத்துறைக்கு தெரியவில்லை என்பது அதிகாரிகளின் அலட்சியத்தை பிரதிபலிக்கிறது. மாவட்டம் முழுதும் முறையாக ஆய்வு செய்தால் மட்டுமே, போலி டாக்டர்களின் பிடியிலிருந்து மக்கள் தப்புவார்கள்.
கிளினிக்கில் ஆய்வு செய்த மருத்துவமக்குழு இது குறித்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அன்பரசிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினோம், “நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது, மெடிக்கல் ஷாப் அருகே தனியாக ஒரு அறையில் அஸ்வத் நாராயணன் ஒரு நோயாளிக்கு காய்ச்சல் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ‘நீங்கள் மெடிக்கல் படித்ததற்கான சர்டிபிகேட்’ கொடுங்க எனக்கேட்டோம். நான் எம்பிபிஎஸ் படிக்கவில்லை, 12வது தான் முடித்திருக்கிறேன். ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறேன் என, தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார், அவரின் கிளினிக் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. சட்டப்படி அவருக்கு தண்டனை கிடைக்கும். மாவட்டம் முழுதும் போலி டாக்டர்கள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. போலி டாக்டர்கள் குறித்து மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்