தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பாக (11.09.2022) தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவிலான 18வது ஜூனியர் தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஜூனியர் பிரிவில் 400 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், இப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்த தடகள சங்கத்தினருக்கும், போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வியோடு விளையாட்டு பயிற்சிகளும் முக்கியமானதாகும். வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும். தோல்வியை கண்டு சோர்வடையாமல், அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான அடிப்படை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டாலே வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். நமது ஆரோக்கியமே நமக்கு மிகப்பெரிய சொத்தாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள்.
எண்ணங்கள் வலிமையானது, உங்களது நல்ல எண்ணங்களே உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும். ஆகவே மாணவ மாணவிகளாகிய நீங்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனையாளர்களாக வரவேண்டும் என்று வாழ்த்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கத்தின் சார்பாக சங்கத்தின் செயலாளர் திரு. பழனிச்சாமி, பொருளாளர் திரு. அருள் சகாயம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இப்போட்டியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வளர் திரு. ஞானராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பல பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.