திருச்சி : சர்வதேச விமான நிலையத்தில், இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, சிறப்பு மீட்பு விமானங்களாக இயக்கப்பட்டு வந்த விமானங்கள் அனைத்தும், தற்போது தினசரி விமான சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதிகளவு விமான சேவைகள் காரணமாக, திருச்சி விமான நிலையத்தை பொறுத்தவரை, தங்க கடத்தல்காரர்களுக்கு மிக முக்கிய கடத்தல் இயந்திரமாக மாறியுள்ளது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறக்கும் நபர்கள் மூலம் தங்கம் தொடர்ந்து கடத்தப்படுகின்றன. கொரானா காலக்கட்டத்தில் முடங்கி இருந்த குருவிகள், கொக்குகள் தற்போது தங்க கடத்தல் வேலையில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை, மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் (DRI) கழுகுகளை போல கண்காணித்து, அவ்வப்போது வேட்டையாடுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி விமான நிலையத்திற்கு அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இந்த விமானங்களில் வந்த, 55 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார், 200 முதல், 500 கிராம் வரை, கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. அந்தவகையில் மொத்தம், 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.