கிருஷ்ணகிரி : ஓசூர் மத்திகிரி பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் ஒசூர் நகர பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உதவி செய்த தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்,
ஓசூர், குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் நகரமாக இருந்தது. இந்த குற்றங்களை தடுக்க ஓசூர் பகுதிகளில் சென்னை போல சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. ஓசூர் பகுதிகளில் 2 ஆயிரம் புதிய கேமராக்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் குற்ற சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது. 90 சதவீத வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. ஓசூர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் உடனடியாக நாம் வசிக்கும் பகுதியில் ஒரு சிசிடிவி கேமராவை அமைக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு நாம் மாட்டி கொள்வோம் என்ற பயத்தை கொடுக்கும், எனவே அனைவரும் தங்களது வீட்டின் முன்பு சாலையை பார்த்த வண்ணம் ஒரு சிசிடிவி கேமராவை அமைக்க வேண்டும் என்பதுதான் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு எங்களது வேண்டுகோளாக உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் இதுவரை 1,000 கள்ளத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பயம் உள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், கடந்த 6 மாதத்தில் 1,000 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது பெரிய விஷயமாகும், தொடர்ந்து அந்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்