ஐ.டி துறை : சீட்டை விட்டு சற்றும் நகராமல் 100% உழைப்பைக் கொடுக்கும் கார்ப்பரேட் ஊழியர்கள் அலுவலகத்தில் இந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருங்கள். ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். உணவு நேரத்தை எப்போதும் மிஸ் செய்யாதீர்கள். சரியான நேரத்துக்குச் சாப்பாடு எடுத்துக்கொள்ளாவிட்டால், சிறுநீரகக்கட்டி, இரைப்பை பிரச்னை, அல்சர், குடல்வால் அழற்சி போன்றவை ஏற்படலாம். உணவு மற்றும் நொறுக்குத்தீனிகளை இருக்கையில் அமர்ந்தபடியே சிலர் உண்பதுண்டு. இடைவேளை நேரங்களில் வெளியில் செல்லுங்கள். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை உடலில் வெயில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும்.
உட்காரும்போது முதுகுத்தண்டு நிமிர்ந்து நேராக இருக்கவேண்டும். கால்களைத் தொங்கவிட்டபடி உட்காரும்போது, பாதம் தரையைத் தொடவேண்டும். கண்கள், சிஸ்டம் மானிட்டரை நேராக பார்க்க வேண்டும். டைப் செய்பவர்கள், கீபோர்டுக்கு இரண்டு இன்ச் மேல்நோக்கி கைகளை வைத்துக்கொள்வது நல்லது. தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தினமும் காலை 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஏதேனும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். படியேறுவது அலுவலகத்துக்குள் நடப்பது எல்லாவற்றையும் சேர்த்துக் குறைந்த பட்சம் 3 கி.மீ நடப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக டிஜிட்டல் திரையைப் பார்ப்பதால், `டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின்’ (Digital Eye Strain) பிரச்னை ஏற்படக்கூடும். அதனால் செய்திகள் படிப்பது போன்ற விஷயங்களில் கணினியைத் தவிர்த்து அச்சிதழ்களைத் தேர்வு செய்யலாம். முதுகுத்தண்டு வளைய ஒரே இடத்தில் 50 நிமிடங்களுக்கும் மேலாக அமர்ந்திருப்பது, கண், கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இடத்தை விட்டு எழுந்து சற்று நடப்பது சிறந்தது. கஃபைன் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, ஹார்மோன் சமநிலையின்மை, இதய பலவீனம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே காபி, டீ குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் காபி, டீ குடிக்கவேண்டாம்.