சென்னை: தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், ஐஏஎஸ் (Non State Civil Service) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பதே இவரது அன்றாட வேலை. யார் இந்த ‘சூப்பர் வுமன்’ சேலத்தைச் சேர்ந்த பிரியா, கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தியாவிலேயே தீயணைப்பு மற்றும் மீட்பு படையில் சேர்க்கப்பட்ட முதல் பெண் அதிகாரிகள் இருவரில் இவரும் ஒருவர். தீயணைப்புத் துறையில் சிறப்பான வகையில் பணியாற்றி இணை இயக்குநராக உயர்ந்தார். குரூப் 1 அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட சில காலி இடங்களுக்கு மாநில அரசின் பரிந்துரைப்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்படுவார்கள். அதன்படி, 2022 கேடரில் காலியாக உள்ள இடத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரியா ரவிச்சந்திரன். தீயணைப்பு துறையின் வட மண்டல இணை இயக்குநராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார்.