விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா கண்டமநல்லூரை சேர்ந்தவர்கள் மணவாளன், ஏழுமலை, மணவாளனின் சகோதரர் லோகு, மணவாளன் மனைவி சுமதி, மகள்கள் மகாலட்சுமி, மீராபாய், மகன் வரதராஜன். இவர்களில் மணவாளன், கெங்கபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் சேர்ந்து கடந்த (1.1.2020), முதல் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்கள் நடத்தும் ஏலச்சீட்டில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த சுற்றுவட்டார கிராமங்களான கண்டமநல்லூர், சமத்தகுப்பம், மேல்காரணை, கெங்கபுரம், இரும்புலி, அன்னமங்கலம், வயலூர், வளத்தி, சீயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை செலுத்தி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் மணவாளன் உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து மோசடி செய்துவிட்டு திடீரென தலைமறைவாகினர். இந்நிலையில் மணவாளன், ஏழுமலை, வரதராஜன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், மணவாளன் உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து 120-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு மூலம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதும், இதில் முதல்கட்டமாக 37 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 37 லட்சத்து 60 ஆயிரத்து 900 மற்றும் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகையை மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள லோகு, சுமதி, மகாலட்சுமி, மீராபாய் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.