கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் காளிப்பன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன், அன்பு செழியன் ஆகியோர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 20 பஸ்களில் விதிகளை மீறி, பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து, டிரைவர்களை எச்சரித்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் காளியபபன் கூறியதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒலி மாசு ஏற்படுவதாகவும் புகார் வந்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 20 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.