திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. முக்கிய நீராதாரமாக விளங்கும் ஞாயிறு ஏரியை நம்பி சுற்றுப்பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரியில் இருந்து விவசாய நிலத்திற்கு பாசன வசதிக்காக திறக்கப்படும் மதகு ஒன்று ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் அதனை முறையாக சீரமைக்காமல் மணல் முட்டைகள் கொண்டு மூடி வைத்துள்ளனர். கடந்த மாதம் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஞாயிறு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு படிப்படியாக மீண்டு விளைந்து வந்தன. தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த சூழலில் ஞாயிறு ஏரியின் சேதமடைந்த மதகில் இருந்து வெளியேறும் தண்ணீர் விளைநிலங்களில் தஞ்சமடைந்துள்ளதால் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழை ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில் ஏரியின் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 30000ரூபாய் வரை செலவிட்டு பாதுகாத்து விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வருங்காலங்களிலேனும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நீர்வளத்துறை அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த ஏரி மதகினை சீரமைத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு