திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் சடலம் போன்று ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஏரியின் மையத்தில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்க தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் இறங்கி அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலத்தின் தலையில் தொழிற்சாலைகளில் அணியும் பாதுகாப்பு ஹெல்மெட்டுடன் காணப்பட்டது.
ஆவணங்கள் ஏதும் இல்லாததால் உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர் யாரேனும் இயற்கை உபாதை கழிக்க வந்த போது ஏரியில் தவறி உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த நபர் வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் எனவும், அருகில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியாளர்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு