பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாபுலால் பாய்(63). இவரது மனைவி பரிதா பேகம்(52). இவர்களது மகன், மருமகள் தூத்துக்குடியில் உள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக பாபுலால் பாய், அவரது மனைவி பரிதா பேகம் ஆகியோர் இன்று காரில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை அவர்களது உறவினர் முகம்மத்தஸ்மின் அயாஸ்(26) என்பவர் ஓட்டி வந்தார். மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எட்டயபுரத்துக்கு முன்புள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து முகம்மத்தஸ்மின் அயாஸ் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தினர். இதையடுத்து, பாபுலால் பாய் உள்ளிட்ட 3 பேரும் காரில் இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தகவல் அறிந்து எட்டயபுரம் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வேறொரு காரில் 3 பேரையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்