கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவர் பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து கொண்டு மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து வருகிறார். அவர் 16.03.2021 ஆம் தேதி சுமார் 00.50 மணியளவில் கோவை ரயில் நிலையம் பகுதியிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்லும் இடங்களுக்கு இறக்கிவிட்டுள்ளார். பின்னர் அவர் ஆட்டோவிற்குள் பார்த்த போது அதில் சுமார் 2 1/2 பவுன் மதிக்கத்தக்க தங்கச்சங்கிலி (கிறிஸ்டியன் டாலருடன்) கிடந்ததை எடுத்து துடியலூர் ஊர்க்காவல் படை துணை படைத் தளபதி அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி தங்கச்சங்கிலி ஆட்டோவில் பயணம் செய்த செட்டிவீதியைச் சேர்ந்த ராணி பிரிசில்லா என்பவருக்குச் சொந்தமானதெனத் தெரியவந்தது. உரிய விசாரணைக்குப் பிறகு மேற்படி தங்கச்சங்கிலியை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு இ.கா.ப., அவர்கள் ராணி பிரிசில்லாவிடம் ஒப்படைத்தார்.
மேற்படி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் நற்செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்