திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு தேன், கடுக்காய் ,கல்பாசி ஆகியவற்றை எடுத்து விற்பனை செய்வார்கள்.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இவர்கள் வாழ்வாதாரம் இன்றி உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேறு வேலையும் தெரியாததால் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதையடுத்து பழனி அருகே ஊரடங்கால் தவித்த மலைவாழ் மக்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா முன்னிலையில்,ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அப்போது டி.எஸ்.பி சிவா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்து நாங்களே சொந்த பணத்தில் பொருட்களை வாங்கி வழங்குகிறோம். மலைவாழ் மக்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எங்களை அணுகலாம். எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம், என்றார்.