தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சியகத்தில் 29 /07/ 2021 அன்று நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு காவலர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் உள்ளரங்கு, வெளியரங்கு மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய பயிற்சி துணை கண்காணிப்பாளருக்கு பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்கும் துணை கண்காணிப்பாளர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அவரது உழைப்பால் இன்று டிஜிபியாக உயர்ந்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 10.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு, IAS உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் திரு.சைலேந்திர பாபு, IPS தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி இயக்குனர் திரு. பிரதீப் வி. பிலீப்,IPS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாகத் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தின் இயக்குநர் முனைவர் பிரதீப் வி. பிலிப், IPS நன்றியுரையாற்றினார்.