சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த திருமதி.லட்சுமி பிரசாத், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த திரு.கே.சி.மாகாளி, காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி திரு.சேஷசாய் ஆகியோரும் பணி ஓய்வு பெறுகிறார்கள்.
இதில் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்திய மூர்த்திக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசு முன்வந்தது. ஆனால் பணி நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான பின்னர் மே 23ஆம் தேதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2016ஆம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராக பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐஜியாக திரு.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.தமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்தவர்.
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள திரு.ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் அவர் புதிய உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.