சிவகங்கை: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தாய்ப்பாலின் உன்னதத்தை உணர்த்தும் விதமாக, உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி மருத்துவமனையின் டீன் மருத்துவர் சத்தியபாமா அவர்கள், முன்னிலையில் குழந்தைகள் நலப் பிரிவு சார்பாக தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விழாவின் தொடக்க நாளான இன்று மருத்துவமனை முதல்வர் மரு. சத்தியபாமா அவர்கள், குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தாய்ப்பால் கொடுப்பதின் மகத்துவம் பற்றியும் தாய்ப்பால் கொடுக்காததால் தாய்க்கும் மற்றும் சேய்க்கும் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். உலக அளவில், இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதாச்சாரம் மிகவும் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் இதை மாற்ற நாம் மிகவும் கடினமாக உழைத்து இந்த விகிதாச்சாரத்தை நூற்றுக்கு நூறு சதவீதமாக மாற்ற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் குழந்தைகள் நல துறைத்தலைவர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், மகப்பேறு துறை தலைவர் இந்திராணி, நிலைய மருத்துவ அலுவலர் மஹேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரஃபி, தென்றல் மற்றும் குழந்தை மருத்துவர் வனிதா மற்றும் பலர் இதில் பங்கு பெற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி