தூத்துக்குடி : திருச்செந்தூரில் சமீபத்தில் காலமான தனிப்பிரிவு தலைமை காவலர் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் 1999ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் வழங்கிய நிதியுதவி ரூபாய் 14 லட்சத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் செல்வமுருகன் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்த தெய்வத்திரு. செல்வமுருகன் அவர்கள் 01.10.2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் 1999ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி இறுதியாக 14.07.2020 முதல் திருச்செந்தூர் தாலுகாக காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
மேற்படி காலம் சென்ற தெய்வத்திரு. செல்வமுருகன் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 1999ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள 2750 சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூபாய் 14,09,700/- பணம் நன்கொடை பெற்று, அந்தப் பணத்தை அவரது மனைவி திருமதி. அருணா (43), மகன்கள் கமலேஷ் (18) மற்றும் அகிலேஷ் வர்ஷன் (8) ஆகியோருக்கு காசோலையாக வழங்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி இன்று (08.11.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 1999ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெய்வத்திரு. செல்வமுருகன் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் 1999ம் ஆண்டு காவல்துறையினர் உடனிருந்தனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறியதாவது, ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 1999ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 2750 காவலர்கள் இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த செல்வமுருகன் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகும் என்றும், அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்று உறுதியளித்தார்.
காவல்துறையினர் அயராத இப்பணியின் நடுவே கருணையுள்ளத்தோடு இந்த நிதியை திரட்டுவதற்கு 1999ம் ஆண்டு காவலர்கள் குழுவை ஒருங்கிணைத்த சென்னை தலைமை காவலர் திரு. சபரி நாதன், தூத்துக்குடி தலைமை காவலர் திரு. பிச்சையா, திரு. தாமோதரன், திரு. சரவண செல்வன், திரு. செந்தில் ஆறுமுகம், திரு. பாலகிருஷ்ணன் மற்றும் திரு. வள்ளிநாயகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி