திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் – சாந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி(14). இவர்கள் 3 பேரும் மாருதி காரில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும் போது கரூர் சாலை புளியம்பட்டி அருகே கார் வந்த போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள் கார்களின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாமல் தியாகராஜன் வலியால் கதறினார். இதை கண்ட பொதுமக்கள் அலறி துடித்து ஓடிவந்தனர். தியாகராஜனின் கால்களை மீட்க போராடினர்.
அந்த சமயத்தில்தான் மூலனூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் காவலர் திரு.கணேஷ், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கினார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது.
அதனால், அதே பகுதியில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்து அங்கு நேரடியாக கணேஷ் சென்றார். அப்போது “ஆம்புலன்ஸ் இருக்கிறது.. ஆனால் டிரைவர் இல்லை, அவருக்கு உடம்பு சரியில்லை” என்றார்கள்.. “பரவாயில்லை நானே ஓட்டுகிறேன். சாவியை மட்டும் குடுங்க” என்று சொல்லி வாங்கி உள்ளார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த தியாகராஜனை, அதில் ஏற்றி, தானே ஆம்புலன்ஸ் ஓட்டி கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இப்போது தியாகராஜனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. உரிய நேரத்தில், தகுந்த உதவியை செய்து, அசுர வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றிய கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால்இ தியாகராஜனை மீட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கும்வரை கணேஷ் ஒரு காவலர் என்று யாருக்குமே தெரியாது!
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி