தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பேரூராட்சி, பண்டாரவிளை மணக்கரை சம்பவத்தில், உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் இல்லத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சென்று அவரது துணைவியார் புவனேஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் தெரிவித்து சொந்த நிதி ரூ.5 லட்சம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பேரூராட்சி, பண்டாரவிளை கிராமத்தில், மணக்கரை சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் இல்லத்திற்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி சட்டமன்ற உறுப்பினர்கள், (திருவைகுண்டம்) எஸ்.பி.சண்முகநாதன், (விளாத்திகுளம்) சின்னப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் (26.08.2020) நேரில் சென்று துணைவியர் புவனேஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சொந்த நிதி ரூபாய்.5 லட்சத்தை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்த மாதம் 18 ஆம் தேதி மணக்கரை பகுதியில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து என்பவரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தனிப்படை தீவிர தேடலில் அவர் மணக்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் விரைந்து சென்று கைது செய்திட நடவடிக்கை போது ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசி எறிந்ததில் சிக்கிய முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சோர்ந்து துடிப்புடன் பணியாற்றி பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயலாற்றி காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு பாராட்டுகளை பெற்றவர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த காவல்துறைக்கு பெரும் இழப்பாகும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் மரணமடைந்ததை அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை தலைவரை இங்கு நேரில் அனுப்பிவைத்து அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன்.அவர்களது குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்கள். விரைவில் நிவாரண தொகையும் அவரது மனைவிக்கு அரசு பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை
தெரிவித்துகொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாவட்ட ஆறங்காவலர் குழு தலைவர் மோகன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார்,தூத்துக்குடி மாவட்ட பனைவெள்ள சங்க தலைவர் தாமோதரன், ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.