வேலூர் : வேலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் திரு. ஐ. சங்கர், (வயது 55) இவர் கடந்த 08.11.2020 அன்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும் சதீஷ்குமார் என்ற மகனும், சங்கரி என்ற மகளும் உள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரரான இவர் 01.12.2003ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். மறைந்த தலைமைக்காவலர் சங்கருடன் 2003 ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் தமிழகம் முழுக்க உதவும் கரங்கள் – 2003 என்ற குழு மூலமாக ஒன்றிணைந்து சுமார் 25 லட்சம் குடும்ப நிவாரண நிதி திரட்டினர்.
இன்று 27.12.2020ம் தேதி அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் பள்ளக்கொள்ளை கிராமத்தில் உள்ள இல்லத்தில் அன்னாரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் நிவாரண நிதியை குடும்பத்தாரிடம் நேரடியாக வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் முதலாவதாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதாலும் சக காவலர்கள் அகால மரணமடையும் போது அந்த காவலரின் குடும்பம் ஓய்வூதியம் இல்லாமல் ஆதரவின்றி நிர்கதியாக தவிப்பதை தடுக்கும் விதமாகவும் தங்களால் இயன்ற உதவியை கூட்டு முயற்சியாக இந்த புண்ணிய காரியத்தை செய்வதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் 2003 பேட்ச் காவலர்கள் தெரிவித்தனர்.
வேலூரிலிருந்து நமது நிருபர்
திரு. ஜனார்த்தனன்