- வீடு, அலுவலகம் என 24 மணி நேரமும் ஏசி-யில் இருப்பது சுகமாக இருக்கலாம். ஆனால், அது ஆரோக்கியத்துக்கு நல்லது இல்லை. ஏசி-யிலேயே இருப்பதன் மூலம் நம்முடைய உடலின் தகவமைப்பை நாமே சிதைக்கிறோம் என்று அர்த்தம். அதிக நேரம் ஏ.சி-யில் இருப்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து போகும்.
- இதனால் கண் எரிச்சல், பார்வை மங்குதல் போன்ற பிரச்னை எழலாம். கண் எரிச்சல், கண் உலர்தல் பிரச்னை உள்ளவர்கள் அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இது கண் பிரச்னையை மோசமாக்கிவிடலாம். நீண்ட நேரம் ஏசி-யில் இருப்பதால் தாகம் குறையும். இதனால் உடலில் ஈரப்பதம் குறையலாம். நீண்ட நேரம் குறைந்த தட்ப வெப்ப நிலையில் ஏசி இயங்கும் போது அறையில் உள்ள ஈரப்பதம் உலர்ந்துவிடும்.
- பிறகு நம்முடைய உடலில் உள்ள ஈரப்பதத்தை ,ஏசி ஈர்க்க ஆரம்பிக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து பிரச்னைகள் ஏற்படலாம். ஈரப்பதம் குறைவதால் தலைவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். வெளியே அதிக வெப்பமான சூழலில் இருந்து திடீரென்று குளிர்ச்சியான ஏசி அறைக்குள் நுழையும் போது உடல் தன்னை சரி செய்துகொள்ள போதுமான நேரம் கிடைக்காமல் தடுமாறிவிடும்.
- இதன் காரணமாக தலைவலி, நீரிழப்பு போன்ற பிரச்னை வரும். ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்களுக்கு ஏசி பயன்பாடு இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏசி அறை உலர்ந்து, நம்முடைய உடலின் ஈரப்பதத்தை ஏசி ஈர்க்க ஆரம்பிக்கும் போது நம்முடைய , மூக்கில் உள்ள ஈரப்பதம் உலர்ந்து நோய்க் கிருமிகள் எளிதாக சுவாச மண்டலத்துக்குள் செல்ல வழிவகுத்துவிடும்.
- இதன் காரணமாக ஏசி அறையில் இருப்பவர்களுக்கு நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஏசி-யின் குளிர் மனிதனின் மூக்கு மற்றும் தொண்டையின், செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் மூக்கடைப்பு, தொண்டையில் தடைகள், வீக்கம், சளி அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சருமம் உலர்வதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உலர் சருமம் காரணமாக அரிப்பு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும்.