சென்னை : டெல்லி போலீஸ் என்று கூறி கவனத்தை திசை திருப்பி தங்க கட்டிகளை எடுத்துச் சென்ற 4 ஈரானிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஆந்திர மாநிலம், நெல்லூர், ஆனந்தவாடி தெருவைச் சேர்ந்த தினேஷ் குமார்,(19) என்பவர், ஆந்திராவில் உள்ள கமலேஷ் (35) என்பவருக்கு சொந்தமான அம்பிகா பேரடைஸ் என்ற நகை கடையில் வேலை செய்து வருகிறார். தினேஷ்குமார் கடந்த 10.01.2020ம் இரவு சுமார் 07.00 மணியளவில், தங்க கட்டிகள் வாங்குவதற்காக, சென்னைக்கு வந்து, சென்னை, பூக்கடை, எண்.124, NSC போஸ் சாலை என்ற முகவரியில் உள்ள வினய் புல்லிங் என்ற கடையில் ரூபாய் 1 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 300 கிராம் தங்க கட்டிகளை வாங்கிக் கொண்டு, சுமார் இரவு 07.15 மணியளவில், வால்டாக்ஸ் சாலையில் நிறுத்தி வைத்திருந்த அவரது காருக்கு செல்வதற்காக யானைக்கவுனி தெரு மற்றும் ஜெனரல் முத்தையா தெரு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க 4 நபர்கள் (சாதாரண உடையில்) தினேஷ்குமாரை வழிமறித்து, தாங்கள் டெல்லி போலீஸ் என்றும், உங்கள் பையில் துப்பாக்கி உள்ளதா என சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி, தினேஷ் குமார் பையில் வைத்திருந்த 4 கிலோ 300 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டதாக C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க பூக்கடை சரக உதவி ஆணையாளர் திரு.லஷ்மணன் தலைமையில், C-2 யானைகவுனி காவல் ஆய்வாளர் திரு.ராஜகுமார், காவல் ஆய்வாளர்கள் திரு.அகமது அப்துல் காதர், திரு.சித்தார்த் சங்கர் ராய், திருமதி.ராணி, திரு.சத்யன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு. தனிப்படையினர் தீவிர விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஈரானிய குற்றவாளிகள் 1.மெகந்திஆசான், (46), 2.சாதிக், (36), 3.அசன்அலி, (29), 4.அபுஹைதர்அலி, (52), ஆகியோரை சம்பவம் நடந்த 5 நாட்களுக்குள் வடமாநிலம் சென்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 1 ½ கிலோ தங்க கட்டிகள், 2 சவரன் தங்கச்சங்கிலி, 300 ஜெம்ஸ்டோன், பணம் ரூ.1,10,000/- மற்றும் 9 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த பூக்கடை சரக உதவி ஆணையாளர் திரு.எஸ்.லஷ்மணன் அவர்கள் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் (21.01.2020)அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
உடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி.சரத்கர்,இ.கா.ப., பூக்கடை துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன், இ.கா.ப., ஆகியோர் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை