கடலூர்: கடலூர், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதுவது தொடர்பான மோதலில் சில இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
அந்தப்பகுதியில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பற்ற சூழலில் தற்போது தமிழக அரசால் அறிவித்துள்ள காவலர் தேர்விற்கும் இளைஞர்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.பாபு பிரசாந்த் தலைமையில், நெல்லிக்குப்பம் உதவி ஆய்வாளர் திரு.பிரசன்னா அவர்களின் மேற்பார்வையில், காராமணிக்குப்பம் பகுதியில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் பெண்களும் ஆண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் லாட்டரி, கஞ்சா,மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவும், இளைஞர்கள் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் தன்னிகரற்ற பொறுப்புள்ள குடிமகனாக வாழ்ந்துகாட்டிடவும், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இனிவரும் காலங்களில் எந்த ஒரு வேலைவாய்ப்பு என்றாலும் காவல் நிலையத்தில் தான் குற்றமற்றவர்(NOC) என சான்று பெற வேண்டிய சூழல் உள்ளது. அதனால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், சிலரின் தவறான வழிகாட்டுதலால் இளமையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனமும், பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றி உங்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும்! சமூகம் உங்களை புறக்கணித்தபின்னர் நீங்கள் கவலைகொள்வதில் அர்த்தமில்லை….
ஆகவே, இளைஞர்களாகிய நீங்கள் பட்டங்கள் பல பெற்றிடவும், வேலைவாய்ப்புகள் பல பெற்றிடவும், எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி எங்களால் ஆன உதவிகளை செய்து கொடுப்போம் என உறுதியளித்தார்.