தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகுருநாத புரத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி ரம்யா (27) என்பவர் நள்ளிரவு ஒரு மணியளவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் வெளியே வந்த போது அவரை பாம்பு கடித்துள்ளது. இந்நிலையில் அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த சுரண்டை காவல் நிலைய தலைமைக் காவலர் 1849 திரு.சமுத்திரக்கனி என்பவர் அவர்களிடம் என்னவென்று விசாரித்த போது பாம்பு கடித்ததாக கூறியதை அடுத்து உடனடியாக அப்பெண்ணை சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும் நிலையில் மருத்துவர் இல்லாததால் அங்கு இருந்த செவிலியர்கள் உடனடியாக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். காலம் தாழ்த்தாமல் உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால் உடனடியாக தனது உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று காவல் வாகனம் மூலம் அப்பெண்ணை தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து அப்பெண்ணின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலரை மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் அப்பெண்ணின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.மேலும் தலைமைக் காவலர் திரு.சமுத்திரக்கனி அவர்கள் கொரோனா காலத்தில் பொதுமக்களிடையே அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பாராட்டப்பட்டு நற்சான்றிதழ் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
