சென்னை : காவல் பணியின்போது இறந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த தமிழக காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.V.பாலு உள்பட இந்தியா முழுவதும் இறந்த 377 காவல்துறையினர் மற்றும் துணை இராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக இன்று (21.10.2021) காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த மேற்படி 377 காவல்துறையினருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி,
இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தார். தொடர்ந்து, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., தமிழக காவல்துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர் திருமதி.J.விஜயராணி, இ.ஆ.ப., காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறந்த காவல் ஆளிநர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.